தமிழக செய்திகள்

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம்

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

முதல்வர் விஜய் ராஜினாமா

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கில் சுப்பையா, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

5 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளது என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு தடை

மனுதாரர், தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

தடை நீட்டிப்பு

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.