ஆட்டோ, கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டளது. கடந்த 11 நாட்களில் இதன் விலை 4-வது முறையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை 4 முறை உயர்த்தப்பட்டது.
இதேபோல் ஆட்டோ மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கடந்த 15-ம் தேதி டெல்லியில் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.
தொடர்ந்து 22ம் தேதி 1 ரூபாயும், 24-ம் தேதி 1 ரூபாயும் உயர்த்தப்பட்டது. சிஎன்ஜி எரிவாயு விலை நேற்று கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சி என் ஜி விலை 3.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தப் புதிய விலை மாற்றத்தின்படி, சென்னையில் தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.95.00 ஆக உள்ளது.
கடந்த 12 நாட்களில் சிஎன்ஜி விலை உயர்த்தப்படுவது இது 5-வது முறையாகும். இதன்மூலம் 12 நாட்களில் மொத்தம் ரூ.10க்கும் அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.