சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் தொடர்ந்து ஏற்படும் மின்தடையால் தினந்தோறும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவும் சென்னையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
அம்பத்தூர் எஸ்.வி.நகர், விஜயலட்சுமிபுரம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், கொரட்டூர், பானு நகர், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று இரவு தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றபோது அதிகாரிகள் தொலை பேசியை எடுக்க வில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கள்ளிகுப்பம் மின்சார அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அம்பத்தூர்- செங்குன்றம் சாலையில் இரு புறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் வாகனத்துடன் பொதுமக்கள் சாலையில் காத்திருந்தனர். எதிர் திசையில் ஆம்புலன்ஸ் வந்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர். தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளிகுப்பம் மின்சார அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்துக்கு போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மின்தடை ஏற்படும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். மறுநாளும் அதே போல் மின்தடை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
மாங்காடு, ரகுநாதபுரம், சீனிவாசா நகர், சிக்ராயபுரம், இந்திரா நகர், ஜனனி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனை கண்டித்து மாங்காடு துணை மின் நிலைய அலுவலகத்தில் நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்னர். தொடர் மின்வெட்டு காரணமாக நேற்று மாங்காடு நகரமே இருளில் மூழ்கியது. இன்று அதிகாலை வரை அப்பகுதியில் விட்டு, விட்டு மின்சாரம் வந்ததால் பொதுமக்கள் விடிய, விடிய தூக்கமின்றி தவித்தனர்.
சென்னை மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. பெரும்பாக்கம் மின் பாதையில் இருந்த பழுது கண்டறியப்பட்டு சீரமைப்புப் பணிகள் முடிந்து நள்ளிரவு ஒரு மணியளவில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இரவு நேர மின்தடையால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.