சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 2476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விமான நிலையத்தை நவீன மயமாக்கி தரம் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் முதல்கட்டமாக ஆண்டுக்கு சுமார் 23 மில்லியன் பயணிகள் கையாளும் திறன் கொண்ட பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதை தொடர்ந்து தற்போது வரை விமான நிலையத்தில் 2-ம் கட்டமாக 2 ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் சுமார் 10,762.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர மகாலி பேசுகையில்,"கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய உள்கட்டமைப்புக்காக சுமார் 236.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது" என்று கூறினார்.
மேலும் தி.மு.க. எம்.பி. வில்சனின் கேள்விக்கு பதிலளித்த அவர்,"திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரம் மற்றும் தொழில்நுட்பத் பகுதிகள் 76 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.
மேலும், கோவை விமான நிலையத்தில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்பில் எல்லைச் சுவர் கட்டும் பணியும், ஏற்கனவே உள்ள முனைய கட்டிடத்தில் ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது" என்றார்.