213 இடங்களில் நடந்த இந்த சோதனையில் 51 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 40 வியாபாரிகள் மீது வழக்கு செய்யப்பட்டது.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் புழக்கத்தை தடுக்கவும், விற்பனையை ஒழிக்கவும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து விற்பனை நடைபெறும் பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்த போலீஸ் சூப்பிண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் சோதனை நடந்து வருகிறது.
நேற்று மொத்தம் 213 இடங்களில் நடந்த இந்த சோதனையில் 51 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 40 வியாபாரிகள் மீது வழக்கு செய்யப்பட்டது. மேலும் 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றும் 2-வது நாளாக சோதனை நடந்தது. இன்று அதிகாலை முதல் கோவை மாவட்டத்தில் போலீசார் 228 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் கல்லூரிகளில் தங்கி படித்து விட்டு பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு முன்னாள் மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.
அதேபோன்று சந்தேகம் ஏற்படும் கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 480 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம், கருமத்தப்பட்டி, சூலூர், செட்டிபாளையம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியுள்ள வாலிபர்களின் அறைகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
இதில் சில இடங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிடிப்பட்ட வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெறுவதை தடுக்கவும், கோவை மாவட்ட போலீசார் கண்காணிப்பு செய்து வருகிறார்கள்.