தமிழக செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு- செங்கோட்டை ரெயில் இயக்கத்தில் மாற்றம்: பயணிகள் கடும் அவதி

இந்த வழியாக செல்லும் ரெயில் பாதையில் கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் நிறைய முறை சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து தினமும் மதியம் 2 மணி அளவில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் செங்கோட்டையிலிருந்து காலை 5 மணிக்கு ஈரோடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

எப்போதும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இந்த ரெயில் வழித்தடங்கள் செல்லும் பாதையில் ரெயில்வே பராமரிப்பு பணிகள், தண்டவாள பணிகள் என அடிக்கடி நடந்து வருவதால் இந்த ரெயில் இயக்கத்தில் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சில சமயம் பகுதியாகவும் சில சமயம் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பயணிகள் அவதி அடைந்து வரும் நிலையில் தற்போது தண்டவாள ரெயில் பராமரிப்பு பணி காரணமாக இந்த ரெயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது மதுரை -திண்டுக்கல் இடையே தண்டவாளம் மற்றும் பிற பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ரெயில் எண் 16845 ஈரோடு -செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் நாளை முதல் ஜூலை 6-ந் தேதி வரை ஜூன் மாதம் செவ்வாய் கிழமைகளான 9, 16, 23, 30 ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரை இந்த ரெயில் இயக்கப்படாது. மாறாக ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல் ரெயில் எண் 16846 செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் நாளை மறுநாள் அதாவது 8-ம் தேதி முதல் ஜூலை 7 -ம் தேதி வரை புதன்கிழமைகளான வரும் 10, 17, 24 ஜூலை 1 ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வரை இயக்கப்படாது. திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த வழியாக செல்லும் ரெயில் பாதையில் கடந்த சில மாதங்களாகவே பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் நிறைய முறை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அவதி அடைந்து வரும் தென் மாவட்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு மற்றொரு அடியாக உள்ளது. அடிக்கடி இது போன்று பராமரிப்பு பணி என்று கூறி ரெயில்கள் இயக்கத்தை மாற்றுவது கைவிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.