தமிழக செய்திகள்

சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சுமார் 1.5 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை சுமார் 0.9 கிமீ உயரத்தில் விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.