மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரோடு இருக்கும்போது வி.ஏ.ஓ. இறந்ததாக சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் வசிக்கும் பெண்மணி ஒருவர் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது பெருமாள் என்பவர் யார்? என்று கேட்டுள்ளனர். அதற்கு என்னுடைய மகன்தான் என அந்த பெண்மணி கூறியுள்ளார். அப்போது பெருமாளுடைய அம்மா இறந்து விட்டதாகவும், இறந்து போன பெருமாளின் அம்மாவிற்கு நிலமும், நகையும் உள்ளது. அதை பெற்றுத் தருமாறு பெருமாளின் மனைவி மனு கொடுத்துள்ளார். அதன் விசாரணை நடத்த வந்துள்ளோம் என போலீசார் சென்னதை கேட்டு அந்த பெண் அதிர்ந்துள்ளார்.
நான் இங்கு உங்கள் முன் உயிரோடு நிற்கிறேன். நான் இறந்ததாக எப்படி கூறலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் என்னுடைய மகன் பெருமாள் சுமார் 6 மாதத்திற்கு முன் இறந்து போனார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு ரிப்போர்ட் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்போது போலீசார் நீங்கள் இறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாங்க. இதுதான் சான்றிதழ் என காண்பித்துள்ளனர். ஆனால், அந்த பெண் நான் உயிரோடு இருக்கிறேன் என அடித்துச் சொல்லியுள்ளார். பின்னர்தான் சுந்தரி என்ற தனது மருமகள் போலியாக சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அப்படி என்றால் ஆதார் கார்டு உடன் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர். அங்கு போலீசாரிடம் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் காட்டியுள்ளார். உடனே போலீசார், விஏஓ-வை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளனர்.
அந்த பெண்மணியும் வி.ஏ.ஓ. அலுவலகம் சென்று, நான் உயிரோடு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு வி.ஏ.ஓ. நாங்கள் ஆதாரத்துடன்தான் சான்றிதழ் வழங்கியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். நான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் செல்கிறேன் என்று கூறிய பின்னரும் வி.ஏ.ஓ. சொன்னதை திரும்பவும் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இறப்பு சான்றிதழை தாருங்கள் என்று கேட்க, அவரும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம் என சமாதானம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஏதும் தேவையில்லை. ஏன் வழங்கப்பட்டது என்று கேட்டு தீர்வு வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இறுதியாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் பெண்மணிக்கு இறந்ததாக சான்றிதழ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.