தமிழக செய்திகள்

மதுரை எய்ம்சில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ல் செயல்படும்: மத்திய அரசு தகவல்

ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணிகள் நிறைவு அடைந்துள்ளன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024-ம் ஆண்டு மே 22-ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மொத்த திட்டப்பணிகளையும் 33 மாதங்களுக்குள், அதாவது 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

57 சதவீத பணி நிறைவு

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31 நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணிகள் நிறைவு அடைந்துள்ளன. அங்கு புறநோயாளிகள் பிரிவு 2027, ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பணிகள் விரைவாக முடிக்கப்படாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. ஆகவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 5 பேட்ச் மாணவர்களும் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.

அடுத்த ஆண்டு செயல்படும்

எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணி நிறைவு அடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவுசெய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT