தமிழக செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் மறைமுகமாக மத்திய அரசு கர்நாடகாவுக்கு துணை போகிறது- வைகோ குற்றச்சாட்டு

உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் நூலகத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது.

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டி.கே.சிவகுமாருக்கு கண்டனம்

காவிரி டெல்டா பகுதிக்கு பேராபத்தை விளைவிக்க கூடிய மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரின் தொடர்ச்சியான பேச்சுக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் மேகதாது அணை விவகாரத்தில் மறைமுகமாக மத்திய மோடி அரசு துணை போகிறது. இதனை கண்டிக்கிறேன். இதுகுறித்து ம.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து நாளை மறுநாள் (17-ந்தேதி) தென்காசியில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

விஜய்க்கு பாராட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அன்றைய அரசு கூலிப்படையை போல காவல் துறையை ஏவி விட்டது. ஆனால் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அந்த ஆலைக்கு அனுமதி வழங்காமல் உறுதியாக நிற்பதை பாராட்டுகிறேன்.

அந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் விஜய் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுள்ளார்.

தண்டனை

உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் நூலகத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது. பெரியார் போன்ற தலைவர்களின் பெயரை கொண்ட நூலகங்கள் மற்றும் அறிவுச் சோலைகளில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்ட குப்பைகளை எழுதி ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க கமிஷன் அமைத்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும்.

எதிர்காலத்திலும் த.வெ.க. ஆட்சி

தற்போதைய த.வெ.க. அரசில் பல்வேறு துறைகளில் ஆன்லைன் முறைகள் வந்தபிறகு முறைகேடுகள் தடுக்கப்பட்டிருக்கிறது. இனிவரும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அணியே வெற்றி பெறும். தற்போதைய ஆட்சி திட்டமிடப்பட்ட காலம் வரை முழுமையாக தொடரும். எதிர்காலத்திலும் த.வெ.க. ஆட்சி மலரும். திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தான் வழக்கம். இப்போது திடீரென உச்சியில் தீபம் ஏற்றக்கூடாது என கூறுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். தொன்று தொட்டு வரும் நடைமுறைகளை மாற்றுவது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT