தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும் அதற்கு முன்னதாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது.
இது நேரடியாகவும், இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பாகவும் நடக்கிறது. இந்த சுய கணக்கெடுப்பு எவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை இணைய தளம் பதிவு செய்ய முதலில் http:/se.census.gov.in உள் நுழையுங்கள், மாநிலத்தை தேர்ந்தெடுங்கள், கேப்சாவை உள்ளிடுங்கள்.
2-வதாக குடும்பத்தினர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி (விருப்பத்திற்குரியது) ஆகியவற்றை உள்ளிடவும். குடும்பத் தலைவரின் பெயரை பின்னர் மாற்ற முடியாது. ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு முறை பதிவு செய்யப்பட்டால் அதே எண்ணை வேறு எந்த குடும்பத்திற்கும் பயன்படுத்த முடியாது.
3-வதாக விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ.டி.பி.யை உள்ளிடவும். (தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியை பின்னர் மாற்ற முடியாது).
பின்னர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து தபால் அஞ்சல் எண், கிராமம் , நகரம், பகுதியை பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்கள் இருப்பிடத்தை வரைபடத்தில் கண்டறிய வேண்டும். உங்கள் சரியான குடியிருப்பு கட்டிடத்தை அடையாளம் காணவும் மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும் சிவப்பு குறியீட்டை வரைபடத்தில் இழுக்கவும்.
தொடர்ந்து கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். உதவி குறிப்புகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அத்தியாவசிய தகவல், குறிப்புகளின் வழிகாட்டுதலுடன் வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு கேள்வித்தாளை நிரப்ப வேண்டும். இணையத்தில் உள்ளிடப்பட்ட அனைத்து தரவையும் சரிபார்க்க முன்னோட்ட திரையை பயன்படுத்தவும். பதிவுகளை திருத்தலாம். பின்னர் சமர்ப்பிக்க வரைவை சேமிக்கலாம், அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம்.
உங்கள் தரவை பூட்ட இறுதியாக சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும். இறுதி சமர்ப்பிப்புக்கு பிறகு மாற்றங்கள் செய்ய முடியாது. சமர்ப்பிக்கப்பட்ட பின் தங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக பெறப்படும்.
கணக்கெடுப்பாளர் உங்கள் வீட்டிற்கு வரும் போது உங்கள் எஸ்.இ. ஐ.டி. அவரிடம் பகிர வேண்டும். கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை சரி பார்த்து திருத்தங்கள் இருப்பின் சரி செய்வார்.
இந்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி இணையத்தில் சுய விவரங்களை பதிவு செய்யலாம்.