தமிழக செய்திகள்

சென்னையில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 வீடுகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் 19 ஆயிரம் அதிகாரிகள் மேற்பார்வையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுகிறார்கள்.

சென்னையில் இந்தப் பணி இன்று தொடங்கியது. ஒவ்வொரு வார்டு வாரியாக மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் கணக்கெடுப்பாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் 152 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து புள்ளி விவரங்களை சேகரிக்கிறார்கள்.

ஒரு சூப்பர்வைசருக்கு கீழ் 6 முதல் 8 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்ப தலைவரிடம் 33 கேள்விகளை கேட்டு அதனை தங்கள் செல்போனில் உள்ள செயலியில் பதிவு செய்கின்றனர்.

வீடு குறித்த தகவல்கள், செல்போன் எண், குடும்பம் பற்றி அடிப்படை தகவல்கள், குடும்பத் தலைவரின் பெயர், சாதி, வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை, வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை போன்ற கேள்விகள் கேட்கப்படும். இது தவிர வீட்டில் உள்ள வசதிகள் என்னென்ன இருக்கின்றன என்பதையும் கேட்டு பதிவு செய்கிறார்கள். குடிநீர், கழிவு நீர் வசதி, என்னென்ன வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள், இணையதள வசதி, கம்ப்யூட்டர், லேப்டாப், ரேடியோ, தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த செயலில் பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் செயலியில் பதிவு செய்யப்படும். ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 வீடுகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவாக சென்று இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வீட்டில் கணக்கெடுப்பு செய்து முடிக்க குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். நாள் ஒன்றுக்கு பத்து வீடுகள் வரை சென்று புள்ளி விவரங்களை சேகரிக்கலாம் என்றார்.