திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் டாஸ்மாக் வருவாய் 'கட்சி நிதி' என்ற பெயரில் திசை திருப்பப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,600 கோடியைத் தொட்டிருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்திற்கு வந்து சேருவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இயங்கி வந்த 717 மதுபான விற்பனை நிலையங்களை தமிழக அரசு மூடியுள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் இயங்கும் டாஸ்மாக்கின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முழுவதிலும் நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளை முழுமையாகக் கலைத்துவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டாஸ்மாக்கில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளைக் கலைக்க உத்தரவிடப்பட்டிருந்த சூழ்நிலையில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
கரூர், சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொடர்புடைய இடங்கள் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது. கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை கல்லாக்கோட்டையில் கால்ஸ் தனியார் மதுபான ஆலை, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தின் பீளமேடு, பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய 4 டாஸ்மாக் கிடங்குகள் மற்றும் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், மன்னார்குடியில் அமைந்துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டாஸ்மாக் நிதி முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.