தமிழக செய்திகள்

மது போதையில் லாரியை இயக்கி விபத்தில் சிக்கிய டிரைவர் மீது வழக்கு பதிவு

சூரம்பட்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் சின்னசாமி (28) லாரி டிரைவர். கரும்பு லோடை எடப்பாடியில் இருந்து லாரியில் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இறக்கினார்.

பின்னர் அங்கிருந்து பவானி செல்ல லாரி மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தின் அருகே உள்ள சென்டர் மீடியனில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இதில் லாரியின் முன்புற சக்கரம் சேதம் அடைந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை. சூரம்பட்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் மது போதையில் இருந்தது உறுதியானது.

இதை அடுத்து லாரியை சுரம்பட்டி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தினர். லாரி டிரைவர் மீது போதையில் வாகனம் இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.