தமிழக செய்திகள்

அருள் விக்னேஷ் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு- 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு

பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அருள் விக்னேஷ் (வயது34).

எம்.எல்.ஏ. மீது வழக்கு

இவர் அந்த மாவட்டத்தின் பெண் கலெக்டருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் 2013ம் ஆண்டின் சட்டப்பிரிவின் கீழ் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

போலீஸ் வருகை

கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் அருகே அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. வீடு உள்ளது. கலெக்டர் அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் யோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் எம்.எல்.ஏ. வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த எம்.எல்.ஏ.விடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

கட்சியினர் திரண்டனர்

போலீசார் வந்ததால், அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு போலீசார் விசாரணையை முடித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

தொடர்ந்து அவரது வீட்டிற்கு த.வெ.க. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என கட்சியினர் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

கடுமையான பிரிவுகளில் வழக்கு

அருள் விக்னேஷ் மீது BNS 75,78,79 ஆகிய பிரிவுகளில் ஜாமினில் வெளியே வரமுடியாத கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபணம் ஆனால் அருள் விக்னேஷுக்கு 3 வருடங்கள் வரை கடுமையான சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT