அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட மறுத்தது. கட்சி மன்னிப்பு அளித்ததால், வழக்கு முடிவுக்கு வந்தது என நீதிபதிகள் கூறினர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. மே 10-ந்தேதி விஜய், முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 13-ந்தேதி தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.
இதையடுத்து 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்தனர். மற்ற 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கடிதம் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர் 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார்.
21 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவதாக அறிவித்த சபாநாயகரின் உத்தரவை ரத்து
செய்யக்கோரி, வக்கீல் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ‘கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறி இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் ‘சட்டப்படி, 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்துவிட்டதால், தகுதி நீக்கம் என்ற கோரிக்கையே எழவில்லை. எனவே, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது சரிதான்’ என்று கூறி பி.வி.செல்வகுமாரின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களை கட்சி தலைமை மன்னித்துவிட்ட நிலையில், இதில் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த விவகாரம் ஏற்கெனவே முடிந்து விட்டது. இனி இதில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.