பிரபல யூடியூபரும் உணவு விமர்சகருமான இர்ஃபான் மீது ஏற்கனவே பதிவான மருத்துவ விதிமீறல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில், அவரை மீண்டும் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்த தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தனக்குக் குழந்தை பிறந்தபோது, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று, தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் சுயமாகக் கத்தரித்து அதனை வீடியோவாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமத்தை 10 நாட்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்த சுகாதாரத்துறை, ரூ.50,000 அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தது.
இதற்கு முன்பாகவும், வெளிநாட்டில் தனது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிந்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாலினத் தேர்வு தடைச் சட்டத்தை (PCPNDT Act) மீறியதாக இர்ஃபான் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து மருத்துவத்துறை விதிகளை மீறிச் செயல்பட்டது குறித்தும், இது தொடர்பான வழக்குகள் மற்றும் விளக்கங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தவே யூடியூபர் இர்பான் பைலை மீண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.