சென்னை ஐகோர்ட்டில், மதுரை மத்திய தொகுதி வாக்காளர் ஷகிலா தாக்கல் செய்த மனுவில், அதிமுக கூட்டணியில், புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் இயக்குனராகவும், பங்குதாரராகவும் உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனங்கள் குறித்த விவரங்களை மறைத்துள்ளது.
இந்த நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பெற்ற அவர், அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. இதுசம்பந்தமாக விசாரணை நடத்தும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி, மனுதாரர் தரப்பில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் முறையிடப்பட்டது.
இதேபோல, வேட்புமனுக்களில், சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக, அதிமுக வேட்பாளர்கள் ஜெயக்குமார், தங்கமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ஆர்.இ.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், த.வெ.க. தலைவர் விஜய், த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, பா.ஜ. வேட்பாளர் தமிழசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கக் கோரியும் முறையீடு செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வேட்புமனுவில் தகவலை மறைத்தது தொடர்பான வழக்குகளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.