தூத்துக்குடி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவரை கம்பால் தாக்கிய அரசு பள்ளி ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜேசுரதி என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் தாதன்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவனின் தந்தை, கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாணவர்களுக்கு தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் சம்பந்தப்பட்ட மாணவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஜேசுரதி, மாணவரை கம்பால் முதுகு மற்றும் கையின் பின்புறத்தில் பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவருக்கு உடலின் 3 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் ஆசிரியை ஜேசுரதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.