தமிழக செய்திகள்

கமிஷனர் அலுவலகத்தில் போலீசுடன் மோதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோர்ட்டு வளாகத்திலும் தி.மு.க.வினர் திரண்டு போலீஸ் வாகனங்களை மறித்தனர்.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க.வினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள்மீது சட்டவிரோத கூட்டம் மற்றும் அரசு பணியை தடை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.400 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குவாதம்

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோர்ட்டு வளாகத்திலும் தி.மு.க.வினர் திரண்டு போலீஸ் வாகனங்களை மறித்தனர்.

வழக்குப்பதிவு

வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு சேகர்பாபு போலீஸ் அதிகாரிகளுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் போலீசாரை பார்த்து நீங்கள் பஞ்சாயத்து செய்கிறீர்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அப்போது கலாநிதி வீராசாமி எம்.பி.யும் போலீசாருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டார். இவர்களோடு சேர்ந்து அங்கு திரண்டு இருந்த தி.மு.க.வினரும் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோர் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT