திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), இவர் மனைவி மற்றும் மகனுடன், தனது காரில் திருக்கருகாவூர் அருகே உள்ள ஊத்துக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது குடவாசல் அருகே ஓகை அரசு மேல் நிலைப்பள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது காரிலிருந்து அளவுக்கு அதிகமாக புகை வெளியானதை வெங்கடேசன் கண்டார்.
உடனடியாக காரை நிறுத்திவிட்டு காரில் இருந்து 3 பேரும் அவசரமாக இறங்கி வெளியேறினர். இதைத்தொடர்ந்து கார் முழுமையாக பற்றி எறிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜோதிபாசு தலைமையிலான தீயணைப்பு அலுவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. வெங்கடேசனின் கார் சிஎன்ஜி கேஸ் பொருத்தப்பட்ட கார் ஆகும். கேஸ் கசிவு இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.