பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஓரிவயல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சூர்யா(35).
திருமண நிகழ்ச்சி
இந்தநிலையில் கார்த்திக்கின் சகோதரர் ரஜினிகுமாரின் திருமணம் முதுகுளத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கார்த்திக், அவரது மனைவி சூர்யா மற்றும் சென்னையில் கூலி வேலை செய்து வந்த முதுகுளத்தூர் ஓரிவயலை சேர்ந்த காஜா என்ற காளீஸ்வரன் (26), பிள்ளையார் குளத்தை சேர்ந்த பிரபாகரன் (30), கண்ணதாசன் (22), தேவிபட்டினத்தை சேர்ந்த ஜான்கென்னடி (35), சரண்யா(23) ஆகியோர் காரில் ராமநாதபுரத்திற்கு சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மீண்டும் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டனர்.காரை கண்ணதாசன் ஓட்டினார்.
ஆம்னி பஸ்- கார் மோதல்
இன்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்ப லூர்-திருச்சி -சென்னை நெடுஞ்சாலை துறைமங்கலம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பிரபாகரன், காஜா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 5 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
4 பேர் பலி
இதில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்தார். சூர்யாவை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. மற்றவர்களான ஜான்கென்னடி, சரண்யா, கண்ணதாசன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சோகம்
விபத்துக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பியபோது விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.