தமிழக செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார் மோதி பள்ளி மாணவன் பலி- காரில் பாம்பு, பச்சோந்தி இருந்ததால் பரபரப்பு

விபத்தில் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டி கருங்குளத்தை சேர்ந்த சிறுவன் ஜான்சன் (வயது 16). அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மீன் வியாபாரியான இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஜான்சன் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

பள்ளி மாணவன் பலி

இன்று காலை திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார், சாலையின் மைய தடுப்பில் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து மீன் விற்று கொண்டிருந்த ஜான்சன் மற்றும் அங்கு நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விபத்துக்குள்ளான காரை சோதனையிட்டபோது, அதற்குள் டப்பாக்களில் உயர்ரக பாம்பு, எலி, பச்சோந்தி, நட்டுவாக்கலி, நாய், தவளை, நத்தை உள்ளிட்ட பல்வேறு பிராணிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்காட்சி

இது குறித்து மணப்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காரில் வந்த 2 பேரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னையில் வேலை பார்த்து வருவதுடன், நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற கண்காட்சியில் பாம்பு உள்ளிட்ட பிராணிகளை பார்வைக்கு வைத்து விட்டு, பின்னர் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளனர் என்பது ெதரிய வந்தது.

பிராணிகளை முறையான அனுமதியுடன் கொண்டு சென்றார்களா? அல்லது வேறு எதற்காகவாவது கொண்டு செல்லப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT