தமிழக செய்திகள்

மதுரை அருகே பயங்கர விபத்து - சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

காயமடைந்தவர்களுக்கு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் திருச்சி சென்ற போது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீரராம், அவரது மனைவி ரஞ்சனா, ஒன்றரை வயது குழுந்தை பிரனிதா உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீவிர சிகிச்சை:

மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனத்தின் மீது தனது கார் மோதுவதை தவிர்க்க காரை ஓட்டி வந்த ஸ்ரீராரம் காரை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு காரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

பெரும் சோகம்:

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து, இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையிலேயே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.