தமிழக செய்திகள்

ஈரோடு கலெக்டர் கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கலெக்டர் வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துவிட்டு வீடு திரும்பிய நபர், மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் கோபி மற்றும் வெள்ளாங்கோயில் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயில் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (50), விவசாயி. இவர், இன்று கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காகச் சென்றுள்ளார். பணிகளை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கார் மோதி விபத்து

கோபி-ஈரோடு சாலை பிரிவில் சாலையைக் கடக்க முயன்ற போது, ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்த கலெக்டர் கந்தசாமியின் கார் எதிர்பாராவிதமாக சண்முகத்தின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

மருத்துவமனை

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு நிலைதடுமாறி கீழே விழுந்த சண்முகத்திற்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொது மக்களும், பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களும் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர்.

கோபி அரசு மருத்துவமனையில் சண்முகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துவிட்டு வீடு திரும்பிய நபர், மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் கோபி மற்றும் வெள்ளாங்கோயில் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT