தமிழக செய்திகள்

சத்தியமங்கலம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலி

விபத்து நடந்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மடத்துக்குளம் இட்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரணித் குமார் (21). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இதே கல்லூரியில் இவரது நண்பரான அந்தியூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (21), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் (21), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த நிகிலேஷ் குமார் (21) லோகேஷ் (21) ஆகியோர் ஒன்றாக படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இறுதி தேர்வை எழுதிவிட்டு நண்பர்கள் இருந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் காரில் பிரணித் குமார் மற்றும் நண்பர்கள் பண்ணாரி சென்று விட்டு பின்னர் மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காரை பிரணித் குமார் ஓட்டி வந்தார். அப்போது கார் சிக்கரசன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பிரணித் குமார் சம்பவத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் முன் இருக்கையில் அருகே அமர்ந்து வந்த அந்தியூரை சேர்ந்த மோகன்ராஜ் படுகாயம் அடைந்து சுயநலவை இழந்தார். காரின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்த பிரதீப், நிகிலேஷ் குமார், லோகேஷ் ஆகியோருக்கு கை, கால்களில் சிறப்பு காயங்கள் ஏற்பட்டன.

விபத்து நடந்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் மோகன்ராஜ்க்கு நினைவு திரும்பாததால் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் உயிரிழந்த பிரணித் குமார் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.