தமிழக செய்திகள்

களக்காடு அருகே சிறுவன் ஓட்டி சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- சிறுமி பலி

களக்காடு மங்கம்மாள் சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காரில் புறப்பட்டார்.

அப்போது அவரது சகோதரர் பால்பாண்டி மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை கொடுத்து உள்ளார். சிறுவனான துரைப்பாண்டி காரை எடுத்துக்கொண்டு பெட்ரோல் நிரப்ப புறப்பட்டார்.

இதைப்பார்த்த அவரது உறவினர்களின் குழந்தைகளும் வருவதாக கூறினர் அதனைத் தொடர்ந்து துரைப்பாண்டியும், அதே ஊரை சேர்ந்த முருகன் மகள் கன்சிகா (4), தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகியோர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

களக்காடு மங்கம்மாள் சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுமி கன்சிகா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

மேலும் காரை ஓட்டி சென்ற சிறுவன் துரைப்பாண்டி, தினேஷ், பிரதீப். லித்திஷ் ஆகிய 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துரைப்பாண்டியை களக்காடு தனியார் மருத்துவமனையிலும், தினேஷை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பிரதீப், லித்திஷ் ஆகியோரை நெல்லை அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் காரை ஓட்டி வந்த சிறுவன் துரைப்பாண்டி, அவருக்கு காரை கொடுத்த முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து சிறுமி பலியான சம்பவம் களக்காட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.