திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
முதலமைச்சரின் ஆஸ்தான ஜோதிடருக்கு ஏன் அரசு பதவி என எதிர்ப்பு கிளம்பியது. சட்டமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சி கள் கடுமையாக விமர்சித்தன.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையடுத்து ஜோதிடரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்த அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. முதலமைச்சரின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில்,"ஜோதிடர் ரதன் பண்டிட்டை அரசு பணியில் நியமித்ததை கண்டித்து சட்டமன்றத்தில் நான் எடுத்துரைத்த கருத்துக்கு உடனடியாக நியமன ஆணையை ரத்து செய்த முதல்-அமைச்சர் விஜய்க்கும், தமிழக அரசுக்கும் எனது வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழக அரசு ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்பப் பெற்று கொண்டுள்ளது. விமர்சனங்களுக்கு செவி சாய்த்து உரிய நடவ டிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.