வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். திமுக இழந்த ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறது. இவை இரண்டுமே கடினமானது என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் விசுவநாதன் டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி, அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் போட்டி என்பது கேள்விக்கே இடமில்லாத ஒன்றாக உள்ளது. தாராபுரத்திலும், மதுராந்தகத்திலும் ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றி கிடைக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சிக்கு, மக்கள் தரும் அங்கீகாரமாகவே இந்த தேர்தல் முடிவு அமையும்.
தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள ஒரு கூட்டணி அரசுக்கு, மக்கள் நலத் திட்டங்களுக்காக, மக்கள் அளிக்கும் அங்கீகாரமாகத்தான் இந்தத் தேர்தலை பார்க்கிறேன்.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் மிகச் சிறந்த வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
தேர்தல் அரசியல் என்பது வேறு. அதில் ஒரு கட்சித் தலைவர்கள், மற்றொரு கட்சித் தலைவர்களை, மாறி மாறி தங்களது கருத்துகளைச் சொல்வதும், அதற்கு பதில் சொல்வதும் இயல்பான நிலவரங்கள்தான். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.
இப்போது எடப்பாடி பழனிசாமி தப்பித்துக் கொள்வதற்காக முயற்சி செய்கிறார். அது மிகவும் கடினம். அதேபோல திமுக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள, முயற்சி செய்கிறது. அதுவும் கடினம். எனவே அவர்கள் இருவருக்கும் இடையேதான் போராட்டம் நடக்கிறதே தவிர, எங்களுக்கும் அவர்களுக்கும் இந்தத் தேர்தலில் போராட்டமே கிடையாது.
மக்கள் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை ஸ்வீப் விக்டரியை கொடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். அதனால் இந்தத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழக கூட்டணி வெற்றி பெறும்.
தேர்தலில் நிற்பது வெற்றி பெறுவது, தோற்பது, அல்லது ஒரு கட்சியில் சேர்வது என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் விருப்பம். மற்றும் ஜனநாயக உரிமை.
அந்த அடிப்படையில், தங்களுக்கு முந்தைய இயக்கத்தின் கொள்கை பிடிக்கவில்லை, தலைமை பிடிக்கவில்லை, கோட்பாடு பிடிக்கவில்லை என்றும், அந்த இயக்கம் நீண்ட காலத்துக்குச் செல்லக்கூடிய ஒன்றாக இருக்காது என்றும் உணர்ந்து, பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அந்தப் படகில் அல்லது கப்பலில் ஏறினால், பயணம் சரியாகச் சென்று சேராது என்பதை உணர்ந்தும், ஒரு நீண்டகால நெடும்பயணத்துக்கு சரியான தலைமை தேவை என்ற அடிப்படையிலும், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
திமுகவுடன் எதிர்காலத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, வாய்ப்பே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.