தவெக கூட்டணி
தமிழக செய்திகள்

த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு பா.ஜனதா எதிர்ப்பு: உடனே ரத்து செய்யும்படி தேர்தல் ஆணையத்தில் புகார்

த.வெ.க. பட்டியலில் திருமாவளவன், மாணிக்கம் தாகூர், வைகோ பெயர் இடம் பெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் த.வெ.க.-வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளது.

தமிழக பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன், வி.சி.க. கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் எம்.பி, வன்னி அரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

நட்சத்திர பேச்சாளர்களை பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பெயர்

இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் த.வெ.க. கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து உள்ளது.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தையும் கேலிக் கூத்தாக்கி ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இதே போன்று ஆம்ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாத வரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் த.வெ.க.வுக்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க.வுக்க அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT