தமிழக செய்திகள்

பரபரப்பான இடைத்தேர்தல் முடிவு- மதுராந்தகம், தாராபுரத்தை கைப்பற்றும் த.வெ.க

முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

மது​ராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்கள்

மது​ராந்​தகம் தொகு​தி​யில் த.வெ.க. சார்பில் மரகதம் குமர​வேல், தி.மு.க. சார்பில் பரந்​தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்​பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி​ராமன் மற்​றும் சுயேச்சை​கள் என மொத்​தம் 27 பேர் போட்டியிட்டனர்.

தாராபுரம் தொகு​தி​யில் சத்​தியபா​மா (த.வெ.க.), சுகன்​யா (தி.மு.க.), பானு​மதி (அ.தி.மு.க.), லட்​சுமணன் (இந்​திய கம்யூனிஸ்டு), கார்த்​திகா (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர். தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்களை பொறுத்தவரை ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்பது பல ஆண்டுகளாக பேசப்பட்டும், மெய்ப்பிக்கப்பட்டும் வந்தன.

ஆனால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் இருந்து சற்று வித்தியாசமான தேர்தல். கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாராபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமாவும், மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மரகதம்குமரவேலும் வெற்றி பெற்றார்கள்.

வெற்றி பெற்ற இரண்டே வாரங்களில் இருவரும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார்கள். கட்சி மாறியது மட்டுமல்ல இருவருமே மீண்டும் அதே தொகுதியில் த.வெ.க. வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டார்கள். இது மக்கள் மத்தியிலும், கோர்ட்டிலும் விமர்சிக்கப்பட்டது.

4 மாதங்களுக்கு முன்பு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வென்றவர்கள் இந்த தேர்தலில் விசிலுக்கு எப்படி மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

பிரசாரம்

அதற்கு ஏற்றாற்போல் இரு தொகுதிகளிலும் இருவருக்குமே ஆங்காங்கே எதிர்ப்புகளும் கிளம்பியது. அதையும் மீறிதான் அவர்கள் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

பிரசாரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை திருடி விட்டதாக கடுமையாக விமர்சித்தார்கள். இரு கட்சிகளின் விமர்சனத்துக்கும் முதலமைச்சர் விஜய்யும் தனது பிரசாரத்தில் தக்க பதிலடி கொடுத்தார்.

இந்த தேர்தல் கடந்த காலங்களை போல் இல்லாமல் முடிவுகள் மாறலாம். எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக முடிவு வரலாம் என்று பேசப்பட்டது. இதற்கிடையில் ஓட்டுப்போட பெண்கள் அதிக ஆர்வம் காட்டியதால் த.வெ.க.வுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்றும் பேசப்பட்டது.

அதேசமயம் இளம் வாக்காளர்கள் இடைத்தேதர்தலில் ஆர்வம் காட்டாததால் ஓட்டு சதவீதமும் குறைந்தது. இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பான எதிர்ப்பார்ப்புகளுடன் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்குப்பதிவு

மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 1 லட்சத்து 84 ஆயிரத்து 413 பேர் வாக்களித்து இருந்தனர். 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்து இருந்தனர். 80.30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாகவும், தாராபுரத்தில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றிலேயே அவர் 3,571 வாக்குகள் பெற்று 960 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.

அவரையடுத்து தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் 3-வது இடத்திலும் உள்ளார்கள்.

தாராபுரத்தில் மாறி மாறி முன்னிலை

தாராபுரம் தொகுதியில் முதல் சுற்றில் த.வெ.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. அக்கட்சி வேட்பாளர் பானுமதி த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை விட 5 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார். தி.மு.க. வேட்பாளர் சுகன்யா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

முதல் சுற்றில் அ.தி.மு.க. 2,639 ஓட்டுகளும், த.வெ.க. 2,634 ஓட்டுகளும், தி.மு.க. 2,019 ஓட்டுகளும் வாங்கி இருந்தன. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 168 ஓட்டுகளும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் 70 ஓட்டுகளும், பெற்று இருந்தனர்.

2-வது சுற்றின் முடிவிலும் அ.தி.மு.க. 592 வாக்குகள் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து மாறி மாறி இரு கட்சிகளும் முன்னிலை வகித்தது. முதல் 4சுற்றுகளில் அ.தி.மு.க. முன்னிலையில் இருந்தது. 5-வது சுற்றில் த.வெ.க. முன்னிலை வகித்தது. இதனால் த.வெ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் இந்த தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.

2-வது இடத்துக்கு வந்த தி.மு.க.

11-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த சுற்று முடிவில் த.வெ.க. 31,327 ஓட்டுகளும், தி.மு.க. 25,841 ஓட்டுகளும், அ.தி.மு.க. 24,363 வாக்குகளும் பெற்று இருந்தன.

த.வெ.க. 5,456 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. முதல் 4 சுற்றில் முன்னிலையில் இருந்த அ.தி.மு.க. படிப்படியாக இறங்கி 3-வது இடத்துக்கு சென்றது. இதனால் காலையில் மகிழ்ச்சியாக இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், 3-வது இடத்துக்கு அ.தி.மு.க. வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

த.வெ.க. முன்னிலை

இந்த தேர்தலை பொறுத்தவரை பகல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளரை விட 12,430 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா அ.தி.மு.க. வேட்பாளரை விட 9,636 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதன் மூலம் 2 தொகுதிகளிலும் த.வெ.க. முன்னிலையில் உள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-

த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல்- 38,080

தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் - 25,650

அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் - 21,820

நாம் தமிழர் கட்சி- 1069

சிபிஎம்- 866

தாராபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-

த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா- 48.675

தி.மு.க. வேட்பாளர் சுகன்யா - 39,039

அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி- 31.067

நாம் தமிழர் கட்சி -3.934

சிபிஐ-882

SCROLL FOR NEXT