தமிழக செய்திகள்

இடைத்தேர்தல் காரணமாக அக்டோபர் 6-ஆம் தேதி பொது விடுமுறை: தலைமை செயலாளர் அறிவிப்பு

இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இடைத்தேர்தலை ஒட்டி இரு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவித்து அரசாணை:

இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும்," என கூறப்பட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27 ஆனது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.

அதேபோல் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT