அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்கிச்ஸ்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க. ஆட்சி அமைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் முதல்வர் விஜய் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார். அப்போதே, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர், திங்கள்கிழமை (மே 25) தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து அவர்களின் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். மேலும், அதே நாளில் அவர்கள் மூவரும் த.வெ.க.வில் இணைந்தனர்.
இதனால், இந்த மூன்று தொகுதிகள் காலியானதாக அறிவிக்கபட்ட நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் ராஜிநாமா செய்துவிட்டு, நேற்று த.வெ.க.வில் இணைந்தார். இதனால், அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.