கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலாடு மனோபுரம் சாலை பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை சரியாக மூடாததால் சாலை வழியாக பஸ்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரியில் இருந்து ஆலாடு வழியாக "டி40 ,558ஏ" ஆகிய அரசு பஸ்கள் பூதூர், ரெட்டிபாளையம், தத்தை மஞ்சி, காட்டூர் வழியாக மீஞ்சூர் வரை தினமும் 4 முறை சென்று வருகின்றன. இந்த பஸ்களை சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலாடு மனோபுரம் சாலை பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை சரியாக மூடாததால் சாலை வழியாக பஸ்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் பஸ்கள் பொன்னேரி அடுத்த சின்னவெண்பாக்கம் பகுதியுடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திரும்பி செல்கின்றன. இதனால் பொன்னேரிக்கு வந்து செல்பவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் நடந்து சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, சாலை மோசமாக இருப்பதால் சின்னவெண்பாக்கத்துடன் பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கிருந்து பொன்னேரிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்தே செல்கிறோம். இரவில் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. போதுமான தெருவிளக்குகளும் இல்லை. இந்த பகுதியில் உள்ள சாலை அனைத்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாததால் விபத்துக்களும் ஏற்படுகிறது என்றனர்.