வண்டிச்சோலை-அளக்கரை-அரவேனு சாலையின் குறுக்கே தனியார் பஸ் சிக்கி கொண்டதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து செல்லும் வாகனஓட்டிகளில் பலர், கோத்தகிரி நகருக்கு செல்லாமல் மேட்டுப்பாளையம் செல்வதற்கு வண்டிச்சோலை-அளக்கரை-அரவேனு மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். கார்கள், இருசக்கர வாகனங்கள், சிறிய வேன்கள் செல்ல ஏதுவாக உள்ள இந்த சாலையில் பல இடங்களில் மிகவும் குறுகலான கொண்டை ஊசி வளைவுகள் அமைந்து உள்ளன.
இந்நிலையில் ஒரு தனியார் பஸ் இன்று காலை அந்த மலைப்பாதைக்கு வந்தது. வண்டிச்சோலை அளக்கரை கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, அந்த பஸ்சின் நீளம் மற்றும் குறுகலான சாலை காரணமாக வளைவில் திரும்ப முடியாமல் சாலையோர தடுப்புசுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
வண்டிச்சோலை-அளக்கரை-அரவேனு சாலையின் குறுக்கே தனியார் பஸ் சிக்கி கொண்டதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் பயணம் மேற்கொண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு உள்ளதால் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி மார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சாலை வளைவில் சிக்கி விபத்துக்கு உள்ளான தனியார் சுற்றுலா பஸ்சை மீட்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
இதற்கிடையே வண்டிச்சோலை-அளக்கரை-அரவேனு மலைப்பாதையில் பெரிய பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவை செல்ல அனுமதி உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.