தமிழக செய்திகள்

அரசு பஸ்-டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்: கண்டக்டர் பலி

சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை நோக்கி டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.

அரசு பஸ்சை ஒட்டி வந்த டிரைவர் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதில் அரசு பஸ் கண்டக்டரான கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதி கொடுமூட்டியை சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் (வயது 52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை பாபநாசம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. கோபாலசமுத்திரத்தை கடந்து மேலசெவல் அருகே உள்ள கொழுமடை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.

நேருக்குநேர் மோதல்

அப்போது சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை நோக்கி டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. மேலும் டிப்பர் லாரியும் சாலையோர பள்ளத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. மேலும் மோதிய வேகத்தில் லாரி மற்றும் பஸ்சின் முன்பக்க பகுதிகள் அப்பளம் போல நொறுங்கியது.

கண்டக்டர் பலி

விபத்துக்குள்ளான பஸ்சில் சுமார் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில் அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அரசு பஸ்சை ஒட்டி வந்த டிரைவர் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் இடிபாட்டுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதில் அரசு பஸ் கண்டக்டரான கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதி கொடுமூட்டியை சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் (வயது 52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீயணைப்பு வீரர்கள்

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் பார்த்து பஸ்சின் இடுப்பாட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேரை மீட்டனர்.

தீவிர சிகிச்சை

தகவல் அறிந்து மேலச்செவல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களில் லாரி மற்றும் பஸ் டிரைவர்கள் உள்பட 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து மேலச்செவல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார்

லாரி டிரைவர் மற்றும் பஸ் டிரைவர் மயக்க நிலையில் இருப்பதால் அவர்கள் குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர்கள் கண் விழித்த பின்னரே விபத்து எவ்வாறு நடந்தது என்ற முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனிடைய நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன், அரசு மருத்துவக் கல்லூரி செல்வராஜன் முன்னிலையில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT