லேண்ட் க்ரூசர் காரை வாங்கித் தருவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த அனுப் ஸ்மித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் தொடர்புடைய வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்திற்காக கடந்த 2024ம் ஆண்டு, ஐதராபாத்தைச் சேர்ந்த ஏஜென்சி மூலம் ரூ.2.60 கோடி மதிப்பிலான லேண்ட் க்ரூசர் கார் வாங்க ஆர்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், சுமார் 1½ ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த கார் மும்பை துறைமுகத்திற்கு வந்து உள்ளது.
அப்போது சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில், காரின் உண்மையான மதிப்பை விட குறைவான மதிப்பில் வாங்கியதாகக் கூறி ரூ.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அபராதத் தொகையை செலுத்துவது தொடர்பாக ஏஜென்சி மற்றும் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்துக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காருக்காக ரூ.2.60 கோடி வழங்கப்பட்ட நிலையில், முறையாக காரை டெலிவரி செய்யாத ஏஜென்சியே ரூ.65 லட்சம் அபராதத்தை செலுத்தி காரை ஒப்படைக்க வேண்டும் என வாய்ஸ் ஆப் காமன் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கார் வாங்கித் தராமல் ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக வாய்ஸ் ஆப் காமன் நிறுவனம் தரப்பில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், லேண்ட் க்ரூசர் காரை வாங்கித் தருவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த அனுப் ஸ்மித் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 1½ ஆண்டுகளுக்கு முன்பே கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகவும், மும்பை துறைமுகத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் காரை தடுத்து நிறுத்தி ரூ.65 லட்சம் சுங்க வரி மற்றும் அபராதத் தொகையை செலுத்துமாறு தெரிவித்ததாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனுப் ஸ்மித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.