தமிழக செய்திகள்

முறிந்த கூட்டணி - காங்கிரஸ் உடனான நாடாளுமன்ற இருக்கைகளை மாற்றக்கோரி சபாநாயகருக்கு கனிமொழி கடிதம்!

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்பதால், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடனான தசாப்த கால கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, மக்களவையில் திமுக உறுப்பினர்களுக்குத் மாற்று இருக்கை வசதி செய்து தருமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2026 தேர்தல் முடிவுகள் வெளியானநிலையில், திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ், தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் கனிமொழி இக்கடிதத்தை எழுதியுள்ளார். அதில்,

“மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கை அமைப்பில் தகுந்த மாற்றங்களைச் செய்யுமாறு நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், இந்திய தேசிய காங்கிரஸுடனான எங்கள் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாலும், அவையில் தொடர்ந்து அவர்களுக்கு அருகிலேயே எங்கள் உறுப்பினர்கள் அமர்ந்திருப்பது பொருத்தமாக இருக்காது.

எனவே, திமுக நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தங்கள் அலுவலகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.