தமிழக செய்திகள்

நீலகிரியில் ப்ரோக்கோலி விலை கிடுகிடு உயர்வு

கனமழையால் புரோக்கோலி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புரோக்கோலி உள்ளிட்ட வெளிநாட்டு வகை காய்கறிகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் முக்கியத்தொழிலாக விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைத்தோட்ட காய்கறிகளும், ப்ரோக்கோலி உள்ளிட்ட வெளிநாட்டு வகை காய்கறிகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

விலை உயர்வு

குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் ப்ரோக்கோலி உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊட்டி சந்தையில் ஒரு கிலோ ப்ரோக்கோலி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை ரூ.200 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது.

சூப் தயாரிக்க...

சமீபத்தில் பெய்த கனமழையால் ப்ரோக்கோலி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவும் குறைந்துள்ளது. மேலும், குளிர்காலத்தில் சூப் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்க ப்ரோக்கோலியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் சந்தையில் அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 30 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை ப்ரோக்கோலி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ப்ரோக்கோலிக்கு நல்ல விலை கிடைப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT