சென்னை விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பறவை மோதியதால் லண்டன் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும், சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு, லண்டன் புறப்பட்டு செல்லும்.
இதைப்போல் இன்று லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 224 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 236 பேருடன் சென்னை நோக்கி வந்தது. இந்த விமானம் இன்று காலை வழக்கமான நேரத்திற்கு முன்னதாக அதிகாலை 3 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்க தயாரானது.
அந்த விமானம் படிப்படியாக, உயரத்தையும் வேகத்தையும் குறைத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, சுமார் 500 அடி உயரத்தில் பறந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதி விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை பத்திரமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக, தரை இறங்கக்கூடிய இடத்தில் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 236 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
விமானத்தில் பறவை மோதியது பற்றி அறிந்ததும் விமான பொறியாளர்கள் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.
இதில் பறவை மோதியதில் விமானம் சேதம் அடைந்து இருந்ததால் விமானத்தை உடனடியாக மீண்டும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பராமரிப்பு பணிகள் செய்து முடித்த பின்பு விமானத்தை மீண்டும் இயக்க முடியும் என்று விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை5.35 மணிக்கு, லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 268 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். விமானம் புறப்படும் நேரம் பின்னால் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்து உள்ளனர்.
மேலும் விமானத்தில் பறவை மோதியது தொடர்பாக டெல்லியில் உள்ள விமான ஆணையம் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. பறவை மோதியதும் விமானி முன்எச்சரிக்கையாக செயல்பட்டதால் விமானத்தில் இருந்த 236 பேர் அசம்பாவிதம் ஏதும் இன்றி உயிர்தப்பினர். இச்சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.