கோவை கங்கா மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக திறக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குடும்பத்தினர் புற்றுநோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், மற்றும் தன்னம்பிக்கை மீட்டெடுக்கும் தகவல்களை எளிதில் அறிய உதவும் வகையில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் ‘மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், கோவை கங்கா மருத்துவமனை சார்பில் சிறப்பு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கா மருத்துவமனையின் ‘பி’ பிளாக் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை, மருத்துவமனையின் தலைவர் கனகவல்லி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சி அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். குறிப்பாக, பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மார்பகப் புற்றுநோய் குறித்த அடிப்படைத் தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து கண்காட்சியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள், பெண்கள் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளும் சுய மார்பகப் பரிசோதனை முறை, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் மேமோகிராபி பரிசோதனையின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், புற்றுநோய் சிகிச்சை குறித்த பொதுமக்களின் அச்சம் மற்றும் தவறான புரிதல்களைப் போக்கும் வகையிலும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கீமோதெரபி சிகிச்சை தொடர்பான அச்சங்கள், புற்றுநோய் சிகிச்சை குறித்த பொதுவான தவறான கருத்துகள் ஆகியவற்றுக்கு மருத்துவ ரீதியான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் கண்காட்சியில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
புற்றுநோய் அறுவை சிகிச்சையுடன், தேவையான சந்தர்ப்பங்களில் மார்பகத்தை மறுசீரமைக்கும் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் பயிற்சி பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் ஆகியோர் இணைந்து செயல்படுவதன் மூலம், நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், பெண்களின் உடல் தோற்றத்தையும் தன்னம்பிக்கையையும் மீட்டெடுக்க உதவும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு சில பெண்களுக்கு கைகளில் ஏற்படக்கூடிய ‘லிம்பிடீமா’ (Lymphedema) எனப்படும் நிணநீர் வீக்கம் குறித்தும் கண்காட்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறுகையில்:-
“மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சரியான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் சிறந்த சிகிச்சை பலன்களைப் பெற முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிவது பெண்கள் தங்களது இயல்பான வாழ்க்கையை மீண்டும் தொடருவதற்கு முக்கியமானதாகும்.
நவீன மார்பகப் புற்றுநோய் சிகிச்சை என்பது வெறும் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது அல்லது குணப்படுத்துவது மட்டுமல்ல. நோயாளியின் உடல் நலம், உடல் தோற்றம், தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிப்பதே நவீன அணுகுமுறையாகும்.
சரியான சிகிச்சையின் மூலம் பெண்கள் தங்களது தன்னம்பிக்கையை மீட்டெடுத்து, மீண்டும் பணிக்குச் சென்று, புற்றுநோய்க்குப் பிந்தைய இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும்” என்றார்.
மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தேவையற்ற பயத்தைப் போக்குதல், ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து கொள்ள பெண்களை ஊக்குவித்தல் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.