காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இது பற்றி அதிகாரிகள் நாளை ஆய்வு செய்து முடிவு எடுக்கிறார்கள்.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. தற்போதைய த.வெ.க. அரசு இத்திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்திருக்கிறது.
இதற்கான துவக்க விழா பெரியார் பிறந்த நாளான 17ஆம் தேதி நடைபெறும் என்றும், காமராஜர் படித்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் முதலமைச்சர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 17ஆம் தேதி திட்டத்தின் துவக்க விழா சாத்தியமாகுமா? என்பது சந்தேகமாக இருந்தது.
இப்போது 17-ம் தேதிக்கு பதிலாக 22-ந் தேதி இந்த திட்டத்தின் துவக்க விழா நடைபெறும் என அரசு செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அரசு செயலாளர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க விழா 17ஆம் தேதிக்கு பதிலாக 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், சென்னையில் இத்திட்டத்தை முதலமைச்சர் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு துவக்கி வைப்பார் என்றும், அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் 22 -ம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் தெரிவித்துள்ள அவர், இதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த திட்டத்தை முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இது பற்றி அதிகாரிகள் நாளை ஆய்வு செய்து முடிவு எடுக்கிறார்கள்.
15 ஆயிரத்து 454 பள்ளிகளில் 6-8வரையிலான 15லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு வரை கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.