தமிழக செய்திகள்

சேலம் கோர்ட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் சோதனை

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை.

சேலம்:

சேலம் அஸ்தம்பட்டியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டு மெயிலுக்கு இன்று காலை ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் சேலம் கோர்ட்டில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள் சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் விரைந்து சென்று கோர்ட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் சேலம் கோர்ட்டில் இன்று காலை பரபரப்பு நிலவியது. ஏற்கனவே சேலம் கோர்ட்டுக்கு 2 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.