போடி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அணைக்கரைப்பட்டி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்து அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் 22 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள மானூத்து பகுதியை சேர்ந்த பூமிராஜா (59), கோட்டையன் (56) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில் இவர்கள் ஆந்திராவை சேர்ந்த சூரி என்பவரிடம் இருந்து இதனை வாங்கி வந்தது தெரிய வந்தது.
இவர்கள் மீது ஏற்கனவே மதுரை மாவட்டம் எழுமலை, சேடப்பட்டி, கரிமேடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த ஹரிேலாக்கேஷ் (21) கூடலூர் அண்ணாநகரை சேர்ந்த கஜேந்திரன் (21), போடி வ.உ.சி. நகரை சேர்ந்த நீர்காத்த லிங்கம் (26) ஆகியோர் தங்கள் சொந்த உபயோகத்திற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவரவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கம்பம் பாரதியார் நகரை சேர்ந்த மோகன் (46) என்வர் அனுமதியின்றி புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வரவே நகர் தெற்கு போலீசார் கைது செய்தனர். சின்னமனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினபாண்டி (56), தேவதானப்பட்டி அருகில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (46), போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (33) ஆகியோர் அனுமதியின்றி மதுபானம் விற்றது தெரியவரவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.