கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து: திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர்

சென்னையை அழகுப்படுத்தும் நோக்கு மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை பெருநகரை சுற்றி ஓடும் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் போன்றவை பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு காலத்தில் ஆறுகளாக இருந்த இவை தற்போது குறுகி கால்வாயாக சுருங்கி விட்டது.

முகம் சுளிக்க வைக்கிறது

பெருகிவரும் குடியிருப்புகள், மக்கள் நெருக்கத்தின் காரணமாக கால்வாய்கள் ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. பெருநகர சென்னை என்ற அந்தஸ்தை சென்னை பெற்றாலும் இந்த கால்வாய்கள் மற்றும் ஆறுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் படகு போக்குவரத்து பக்கிங்காம் கால்வாயில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அடையாளமே தெரியாமல் கூவமாக மாறிவிட்டது.

தூய்மைப்படுத்த முயற்சி

சென்னை பெருநகரை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநகராட்சி பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றையும் தூய்மைப்படுத்த முயற்சி மேற்கொண்டது.

இந்த நிலையில் ‘வாட்டர் மெட்ரோ திட்டம்’ என்ற புதிய முயற்சி மூலம் பக்கிங்காம் கால்வாயை புதுப்பித்து அதில் படகு போக்குவரத்து தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவையை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரையின் அடிப்படையில் அதன் சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

படகு போக்குவரத்து

எண்ணூரில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக மாமல்லபுரம் வரை 53 கி. மீட்டருக்கு இந்த கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சென்னையை அழகுப்படுத்தும் நோக்கு மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

திட்ட அறிக்கை

முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை முழுமையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்த புள்ளியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கப்படும். அதன் பின்னர் இதனை செயல்படுத்துவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.