தமிழக செய்திகள்

‘ஏழைகளின் சுருக்குப் பையில் இருக்கும் காசை பிடுங்கும் பாஜக’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, தனது தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர்,

“திருவாரூர் என்றால் திமுக ஊர் என்பதால் இங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறது திமுக தேர்தல் அறிக்கை.

டிஆர்பி ராஜாவுக்கு மன்னார்குடி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்யவேண்டும்.

திருத்துறைப்பூண்டி மக்கள் கதிர் அருவாள் சின்னத்தில் வாக்களித்து பொதுவுடமை இயக்கத்தின் வேட்பாளர் மாரிமுத்துவை வெற்றிப்பெற செய்யவேண்டும்.

நன்னிலம் தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிமுன் அன்சாரியையும் வெற்றிப் பெறசெய்யவேண்டும். நான் உங்களவீட்டுப் பிள்ளை. இந்த மண்ணின் மைந்தன். உங்களால் உருவாக்கப்பட்ட நான் கேட்கிறேன். இவர்களை நால்வரையும் வெற்றிப் பெற செய்யவேண்டும்.

திருவாரூர் பேரே அழகு. அதிலும் திருவாரூர் தேர் என்றாலே பேரழகு. அப்படிப்பட்ட ஆழித்தேர் 22 ஆண்டுகள் ஓடவில்லை. அதனை ஓடவைத்தவர் கருணாநிதி. எங்கள் ஆட்சியில் ஏராளமான திட்டங்களை திருவாரூர் தொகுதிக்கு செய்துள்ளோம்.

தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் நடைபோட திமுக ஆட்சி தொடர வேண்டும். 2021ல் திமுக மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள். தமிழ்நாட்டை காக்கணும்னா திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரணும். நாம் போராடுவது திமுக வெற்றிக்காகவோ கூட்டணி வெற்றிக்காகவோ, இல்லை. தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டைக் காக்க, திமுகவின் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பாஜக, அதிமுகவை விமர்சித்து பேசிய அவர், திமுகவின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், ஏழைகளின் சுருக்குப்பையில் இருக்கும் காசைக்கூட உருவும் திட்டங்களை போடும் பாஜகவிற்கு, மக்களுக்கு நேரடிப் பணப்பலம் கிடைப்பது வயிறு எரியத்தான் செய்யும். யார் வயிறு எரிந்தால் என்ன, எனக்கு மக்கள் வயிறு நிறையவேண்டும். அதனால்தான் பிப்ரவரி மாதே 5000 நிதி வழங்கினோம்.

எல்லா வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இருப்பது பாஜகவுக்கும், அதன் அடிமை கூட்டத்துக்கும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.” என்றார்.