பருவ மழையை மக்கள் மட்டும் இன்றி பறவைகளும் எதிர் பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சரணாலயத்தில் இயற்கையான சூழல், தட்பவெட்ப நிலை, உணவு, இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றிற்காக வெளி மாநிலங்கள், மற்றும் பாகிஸ்தான், பர்மா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அரிய வகை பறவை இனங்களான வெள்ளை அரிவாள் மூக்கன் மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைக்குத்தி நாரை, கரண்டி வாயன் தட்ட வாயன் வர்ணநாரை, வக்கா மற்றும் வாத்து இனங்கள் என பல்வேறு வகை பறவை இனங்கள் வந்து செல்லும்.
இந்த பறவைகள் அக்டோபர் மாத இறுதியில் வேடந்தாங்கலுக்கு வருகை தந்து சுமார் 6 மாதங்கள் வரை அதாவது ஏப்ரல் மாதம் வரை தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய 2-வது வாரத்தில் அக்டோபர் மாத இறுதியில் வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரத்தொடங்கி விடும். 15 ஆயிரம் பறவைகள் வரை வந்து சுமார் 45 ஆயிரம் பறவைகளாக இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது நாடுகளுக்கு திரும்பி சென்று விடும்.
இந்தப் பறவைகளைக்கான சீசனுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்கினாலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்னும் போதுமான மழை பெய்யவில்லை. வங்கக் கடலில் உருவான 3 புயல்களும் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் இதுவரை பலத்த மழை இல்லை. எதிர்பார்த்த மழை இல்லாததால் வேடந்தாங்கல் ஏரிக்கு வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக வேடந்தாங்கல் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. ஏரியில் தண்ணீர் இல்லாததால் சீசனுக்காக வெளிநாட்டில் இருந்து வரும் அரிய வகைப றவைகள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. இதனால் இந்த கால கட்டத்தில் எப்போது பறவைகளின் “கீச்” குரல்கள் முழுவதும் அடங்கி வேடந்தாங்கல் சரணாலயம் முழுவதும் சத்தமின்றி அமைதியாக காணப்படுகிறது. அப்பகுதி முழுவதுமே பறவைகள் எதுவும் இன்றி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பறவைகளை காணவரும் சுற்றுலாப் பயணிகள் பறவைகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கிறார்கள். குடும்பத்துடன் வரும் குழந்தைகள் பறவைகளை காணமுடியாமல் வருத்தம் அடைந்து செல்லும் நிலை உள்ளது.
இந்த மாத இறுதியிலாவது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்தால் மட்டுமே வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும். வழக்கமாக உத்திர மேரூர் ஏரி நிரம்பி நெல்வாய் மடுவு வழியாக தண்ணீர் வரும்.
ஆனால் உத்திரமேரூர் ஏரியே வறண்டு இருக்கும் நிலையில் கன மழை பெய்தால் மட்டுமே வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வரும் நிலை உள்ளது. போதிய மழை இல்லாததால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் வறண்டு காணப்படுகிறது. வரும் நாட்களில் மழை பெய்தாலும் கூட திரும்பி சென்ற வெளிநாட்டு பறவைகள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த ஆண்டு வேடந்தாங்கலில் பறவைகள் சீசன் வழக்கமான நாட்களில் தொடங்காததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த ஆண்டு அரியவகை பறவை இனங்களை காண முடியாத ஏமாற்ற நிலை உருவாகி இருக்கிறது. பருவ மழையை மக்கள் மட்டும் இன்றி பறவைகளும் எதிர் பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.