தமிழக செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 63 அடியாக சரிவு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 200 கன அடி நீர் என மொத்தம் பாசனத்திற்காக 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் பாசனத்துக்கு நீர்வரத்தை விட அதிக அளவில் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.81 அடியாக சரிந்துள்ளது. இன்று காலை அணைக்கு 289 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 200 கன அடி நீர் என மொத்தம் பாசனத்திற்காக 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.71 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.41 அடியாக சரிந்துள்ளது. இதே போல் வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 20.64 அடியாக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.