தமிழக சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் பெரியகருப்பன். இவரை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஒரு வாக்கில் தோல்வியடைந்ததை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் நாளை நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சீனிவாச சேதுபதிக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேவேளையில் பெரிய கருப்பன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு சென்றதாகவும், அதை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார் என்றும் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.