தமிழக செய்திகள்

வங்கி ஊழியரை மிரட்டி ரூ.11 லட்சம் பறிப்பு: பிரபல ரவுடிகள் உள்பட 4 பேர் கைது

4 பேர் கும்பல் கார்த்திகேயனை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றனர்.

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று முன்தினம் சென்னை பாரிமுனை பகுதியில் இவருக்கு தெரிந்த நபரிடம் செலவுக்காக ரூ.11 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் அங்கு இருந்து புறப்பட்டு தியாகராய நகர் வாணி மகால் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 4 பேர் கும்பல் கார்த்திகேயனை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து கார்த்திகேயன் சென்னை பாண்டிபஜார் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சென்னை தேனாம்பேட்டை உதவி ஆணையர் ஜமால் மற்றும் பாண்டிபஜார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம கும்பலின் இரு சக்கர வாகனத்தின் எண்களை வைத்து விசாரணை செய்ததில் சென்னை வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் அதே பகுதியை சேர்ந்த அருண்கு மார் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகள் ஆனந்த செல்வன் ( 32 ) சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பப்லு (32) திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முகமது பாசில் (32) என்பது தெரிய வந்தது.

இவர்களிடம் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரம் பணம் மற்றும் ஒரு பைக், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஆனந்த செல்வன் மற்றும் பப்லு ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பது தெரியவந்தது.

பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி ரூ.11 லட்சத்துக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்த பணம் ஹவாலா பணமா? என்றும் கார்த்திகேயன் ரூ.11 லட்சம் பணம் வைத்து இருப்பது இந்த கும்பலுக்கு எப்படி தெரியவந்தது யாராவது தகவல் கொடுத்தார்களா? எனவும் பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT